Saturday, September 11, 2010
வாழ்க்கை வளம்பெற கண் திருஷ்டி விநாயகர் வழிபாடு!
"கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது" என்பது பழமொழி. திருஷ்டி என்றால் பார்வை என்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதான். கண்களால் இயல்பாகப் பார்க்கப்படுகின்ற பார்வை எந்தவிதக் கெடுதலையும் ஏற்படுத்தாது.
ஆனால் அதே பார்வை தீய எண்ணத்துடனோ அல்லது பொறாமை குணத்துடனோ பார்க்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபரையோ அல்லது பொருளையோ நாசப்படுத்தும் வலிமை கொண்டது என்று முன்னோர்கள் காலந்தொட்டு கூறப்பட்டு வருகிறது.
இதுபோன்ற "கண் திருஷ்டி" என்ற தீய பார்வையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகத் தோன்றியவர்தான் கண் திருஷ்டி கணபதி.
ஆதிகால சித்தர்களில் மிகவும் சிறந்தவரான அகஸ்திய மாமுனிவர் இந்த "கண் திருஷ்டி" என்ற அசுரனை அழித்து சம்ஹாரம் செய்து, இந்த உலகையும், உலக மக்களையும் பாதுகாக்க ஒரு சர்வ வல்லமை பொருந்திய மகாசக்தியை தோற்றுவித்தார். அவர்தான் "கண் திருஷ்டி கணபதி". 33-வது மூர்த்தமாக இந்த உலகில் உதயமான சர்வ மகாசக்தி கணபதி.
இவர் சங்கு சக்கரதாரியாக விஷ்ணுவின் அம்சம் கொண்டு, சிவபெருமானின் அம்சமாக மூன்று கண்களையும் அன்னை பராசக்தியின் அம்சமாக கையில் திருசூலம் மற்றும் பல்வேறு தெய்வங்களின் பல ஆயுதங்களையும் ஒருங்கேப்பெற்று, சீறுகின்ற சிம்ம வாகனமும், மூஞ்சூறு வாகனமும் கொண்டவராக விளங்குகிறார்.
கண் திருஷ்டி கணபதியின் தலையைச் சுற்றிலும், சுழல வைக்கும் ஒன்பது நாகதேவதைகளையும், அக்னிப் பிழம்புகளையும் ஐம்பத்தோரு கண்களையும் தமது அவதார நோக்கத்தின் ஆக்க சக்தியாக இயக்கி இயல்புக்கு மாறாக ருத்ர பார்வையோடு விஸ்வ ரூபமெடுத்த நிலையில் காணப்படுகிறார்.
இவரது அவதார மகிமையை, அதன் அவசியத்தை - அவசரத்தை இந்த உலகுக்குக் கொண்டு வந்தவர், தேனி கொடுவிலார்பட்டி ஸ்ரீராஜராஜேஸ்வரி பீடம் ஞான சித்தர் ஸ்ரீபரஞ்ஜோதி சுவாமிகள். அகஸ்திய மாமுனிவர் தூண்டுதலாலும், ஸ்ரீபரஞ்ஜோதி முனிவரின் பேரருளாலும் இக்கண் திருஷ்டி கணபதியானவர் அனைவரின் வீடுகள் மற்றும் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் இடம்பெறலானார்.
கண் திருஷ்டி கணபதி உருவப்படத்தை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் அந்த வீட்டில் உள்ள அனைவரின் மீதுமுள்ள கண் திருஷ்டி அழிந்து போகும் என்பது ஐதீகம். வியாபார நிறுவனம், தொழிற்கூடங்கள், அலுவலகம் மற்றும் கடைகள் இவற்றில் வைத்து வழிபட்டால் கண் திருஷ்டி அழிந்து வியாபாரம் பெருகி வாழ்க்கை வளமாகும்.
மேலும் பல இடங்களில் வைத்து வழிபடும்போது அதனால் ஏற்படும் "அதிர்வு அலைகளின்" சக்தி, இந்த உலகின் மீது ஏற்பட்டுள்ள கண் திருஷ்டியைப் போக்கி வளமான எதிர்காலத்தை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அன்பும் அமைதியும் தழைத்தோங்கும். நம்முடைய வினைகளை எல்லாம் அழித்து ஞானம் தருபவர் விநாயகர் என்பதால், கண் திருஷ்டியையும் போக்கி சுபிட்சம் தருவார் என்பதாலேயே கண் திருஷ்டி விநாயகர் என்று போற்றப்படுகிறார்.
கண் திருஷ்டி விநாயகர் படத்தை வீட்டில் குறிப்பாக வடக்கு திசை பார்த்து இருக்குமாறு மாட்டி வணங்க வேண்டும். பூஜை அறையில் வைத்தும் வணங்கலாம். வீட்டின் முன் அறையிலோ அல்லது வரவேற்பறையிலோ மற்றவர்கள் கண்பார்வை படுமாறு வைத்து வணங்கலாம். வியாபாரஸ்தலம், அலுவலகம், தொழிற்சாலைகளிலும் வைத்து வணங்கினால் நலம்.
கண் திருஷ்டி கணபதிக்கு தீபாராதனை செய்யலாம். தேனும், இஞ்சியும் நைவேத்தியமாக படைத்து வணங்கலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக தீய சக்திகளிடமிருந்தும், பொறாமை குணம் கொண்டவர்களிடமிருந்தும் காப்பாற்றப்பட்டு உடல் ஆரோக்கியம் பெருகி வாழ்வில் வளத்தை பெருகச் செய்வார் கண் திருஷ்டி விநாயகர்!
http://www.srinmpk.webs.com/
விநாயகர் சதுர்த்தியின்போது கடைபிடிக்க வேண்டிய விரத நடைமுறைகள்
விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். அதாவது யார் கூப்பிட்டாலும் உடனே ஓடோடி வந்து அருள் தருவார். அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக பூஜிக்கும் வகையிலும் இருக்கிறார்.
இனி கடைப்பிடிக்க வேண்டிய விரதத்தை பற்றி பார்ப்போம்... விநாயகர் சதுர்த்தி அன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் பெருக்கி மெழுகி சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டலாம்.
பிறகு பூஜையறையிலே சுத்தம் செய்த ஒரு மனையை வைக்க வேண்டும். அதன் மேல் ஒரு கோலம் போட்டு, அதன் மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்தமாதிரி இருப்பது நல்லது. இந்த இலை மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும். பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பச் செல்லும் எனும் தத்துவம்தான் களிமண் பிள்ளையார்.
களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம். பத்ரபுஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம் பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லிகை என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். அதேமாதிரி முடிந்தளவுக்கு சில வகைப் பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம்.
இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு ரொம்பவும் பிடித்தமான மோதகத்தைத் தயார் பண்ணிக் கொள்ளலாம். அதாவது தேங்காய் பூரணத்தை உள்ளே வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். உள்ளே இருக்கும் வெல்லப் பூரணம்தான் பிரம்மம்.
அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூரணம் நமக்குக் கிடைக்கும் (விநாயகருக்கு முதன் முறையாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி).
பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேணும்னாலும் பாடலாம். ஒளவையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை என்று படிப்பதும் விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம் என்றும் நைவேத்யம் செய்யலாம். பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை. அவரவர் ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.
இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது ரொம்பவும் விசேஷம். விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு நல்ல நேரம் எதுவென்று பஞ்சாங்கத்திலோ அல்லது பெரியவர்கள் மூலமாகவோ தெரிந்து கொண்டு அந்த நேரத்தில் பூஜையை வைத்துக் கொள்ளலாம்.
அந்த நேரம் வரைக்கும் விரதம் இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து போய் பெளர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள். இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர் நிலையிலோ கொண்டு போய் போடுவது வழக்கம். பதினைந்து நாட்களுக்கு கடைபிடித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தியன்று ஒரே ஒரு நாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, நாம் மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைபிடிக்க வேண்டும்.
வருடத்திற்கு ஒருமுறை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதுபோல, மாதந்தோறும் பெளர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருப்பதும் வழமையாகும். அன்றைக்கு முழுவதும் விரதம் இருந்து, விநாயகர் விக்கிரகம் அல்லது படத்திற்கு முன்னால் தீபமேற்றி, நாள் முழுவதும் விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை படைத்து நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடிப்பார்கள்.
விநாயகர் சதுர்த்தி அல்லது சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருப்பதால் உள்ளம் மேன்மையடையும், உடல் ஆரோக்கியம் வளரும், எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன அனைத்தும் அருள்வார்.
http://www.srinmpk.webs.com/
Subscribe to:
Posts (Atom)