Saturday, September 11, 2010

வாழ்க்கை வளம்பெற கண் திருஷ்டி விநாயகர் வழிபாடு!"கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது" என்பது பழமொழி. திருஷ்டி என்றால் பார்வை என்பது நமக்குத் தெரிந்த ஒன்றுதான். கண்களால் இயல்பாகப் பார்க்கப்படுகின்ற பார்வை எந்தவிதக் கெடுதலையும் ஏற்படுத்தாது.

ஆனால் அதே பார்வை தீய எண்ணத்துடனோ அல்லது பொறாமை குணத்துடனோ பார்க்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபரையோ அல்லது பொருளையோ நாசப்படுத்தும் வலிமை கொண்டது என்று முன்னோர்கள் காலந்தொட்டு கூறப்பட்டு வருகிறது.

இதுபோன்ற "கண் திருஷ்டி" என்ற தீய பார்வையிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகத் தோன்றியவர்தான் கண் திருஷ்டி கணபதி.

ஆதிகால சித்தர்களில் மிகவும் சிறந்தவரான அகஸ்திய மாமுனிவர் இந்த "கண் திருஷ்டி" என்ற அசுரனை அழித்து சம்ஹாரம் செய்து, இந்த உலகையும், உலக மக்களையும் பாதுகாக்க ஒரு சர்வ வல்லமை பொருந்திய மகாசக்தியை தோற்றுவித்தார். அவர்தான் "கண் திருஷ்டி கணபதி". 33-வது மூர்த்தமாக இந்த உலகில் உதயமான சர்வ மகாசக்தி கணபதி.

இவர் சங்கு சக்கரதாரியாக விஷ்ணுவின் அம்சம் கொண்டு, சிவபெருமானின் அம்சமாக மூன்று கண்களையும் அன்னை பராசக்தியின் அம்சமாக கையில் திருசூலம் மற்றும் பல்வேறு தெய்வங்களின் பல ஆயுதங்களையும் ஒருங்கேப்பெற்று, சீறுகின்ற சிம்ம வாகனமும், மூஞ்சூறு வாகனமும் கொண்டவராக விளங்குகிறார்.

கண் திருஷ்டி கணபதியின் தலையைச் சுற்றிலும், சுழல வைக்கும் ஒன்பது நாகதேவதைகளையும், அக்னிப் பிழம்புகளையும் ஐம்பத்தோரு கண்களையும் தமது அவதார நோக்கத்தின் ஆக்க சக்தியாக இயக்கி இயல்புக்கு மாறாக ருத்ர பார்வையோடு விஸ்வ ரூபமெடுத்த நிலையில் காணப்படுகிறார்.

இவரது அவதார மகிமையை, அதன் அவசியத்தை - அவசரத்தை இந்த உலகுக்குக் கொண்டு வந்தவர், தேனி கொடுவிலார்பட்டி ஸ்ரீராஜராஜேஸ்வரி பீடம் ஞான சித்தர் ஸ்ரீபரஞ்ஜோதி சுவாமிகள். அகஸ்திய மாமுனிவர் தூண்டுதலாலும், ஸ்ரீபரஞ்ஜோதி முனிவரின் பேரருளாலும் இக்கண் திருஷ்டி கணபதியானவர் அனைவரின் வீடுகள் மற்றும் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் இடம்பெறலானார்.

கண் திருஷ்டி கணபதி உருவப்படத்தை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் அந்த வீட்டில் உள்ள அனைவரின் மீதுமுள்ள கண் திருஷ்டி அழிந்து போகும் என்பது ஐதீகம். வியாபார நிறுவனம், தொழிற்கூடங்கள், அலுவலகம் மற்றும் கடைகள் இவற்றில் வைத்து வழிபட்டால் கண் திருஷ்டி அழிந்து வியாபாரம் பெருகி வாழ்க்கை வளமாகும்.

மேலும் பல இடங்களில் வைத்து வழிபடும்போது அதனால் ஏற்படும் "அதிர்வு அலைகளின்" சக்தி, இந்த உலகின் மீது ஏற்பட்டுள்ள கண் திருஷ்டியைப் போக்கி வளமான எதிர்காலத்தை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அன்பும் அமைதியும் தழைத்தோங்கும். நம்முடைய வினைகளை எல்லாம் அழித்து ஞானம் தருபவர் விநாயகர் என்பதால், கண் திருஷ்டியையும் போக்கி சுபிட்சம் தருவார் என்பதாலேயே கண் திருஷ்டி விநாயகர் என்று போற்றப்படுகிறார்.

கண் திருஷ்டி விநாயகர் படத்தை வீட்டில் குறிப்பாக வடக்கு திசை பார்த்து இருக்குமாறு மாட்டி வணங்க வேண்டும். பூஜை அறையில் வைத்தும் வணங்கலாம். வீட்டின் முன் அறையிலோ அல்லது வரவேற்பறையிலோ மற்றவர்கள் கண்பார்வை படுமாறு வைத்து வணங்கலாம். வியாபாரஸ்தலம், அலுவலகம், தொழிற்சாலைகளிலும் வைத்து வணங்கினால் நலம்.

கண் திருஷ்டி கணபதிக்கு தீபாராதனை செய்யலாம். தேனும், இஞ்சியும் நைவேத்தியமாக படைத்து வணங்கலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக தீய சக்திகளிடமிருந்தும், பொறாமை குணம் கொண்டவர்களிடமிருந்தும் காப்பாற்றப்பட்டு உடல் ஆரோக்கியம் பெருகி வாழ்வில் வளத்தை பெருகச் செய்வார் கண் திருஷ்டி விநாயகர்!
http://www.srinmpk.webs.com/

No comments:

Post a Comment